Saturday, January 19, 2008

குத்துமதிப்பான கவிதை

உயரத்தை ஒருவன்
அண்ணாந்து பார்த்தான்.
உனக்குப் பார்வை
எனக்கு வாழ்க்கை என்றது
தூக்கணாங்குருவி - தன்
கூட்டில் ஊஞ்சலாடியபடி.

எழுதுகோல் எண்ணியது
விதைக்குள் மரம்
எனக்குள் என்னென்ன
எழுதினால் நான்காம்தூண்
வரைந்தால் வானும்
கைப்பிடிக்குள்.

துயரத்தைச் சுருக்கமின்றி
இஸ்திரி போட்டு
அணிந்துகொண்டு
அழுகிறது சமுதாயத்தின்
பெரும்பகுதி.

வால்பிடித்து வளையவந்த
குரங்கு பரவாயில்லை
கால்பிடித்து புழுவான
மனிதப் பரிணாமம்.

என்னதான்
எக்கச்சக்கமாக
எண்ணினாலும்
கிடைப்பதென்னவோ
கடலைப் பருப்புகள்தான்.

அன்புடன்
கஸாலி

Wednesday, December 19, 2007

சிறுகதை - துபாய் ரோஜா

துபாய் ரோஜா

ஒரு இளம் அரபியப் பெண்ணிடம் இந்த அளவுக்கு மனசு விட்டுப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது உண்மையிலேயே ஆச்சர்யம்தான். அதுவும் ஆண் என்றால் விலக்கி வைத்துப் பார்க்கும் துபாயில்! அந்தப் பெண்ணுக்கு வயது 20-க்குள்தான் இருக்கும். அழகை வர்ணிப்பது என்பது குருடர்கள் யானையைப் பார்த்த கதைதான். அராபியப் பெண்களுக்கே உரித்தான சற்று நீளமான முகம். உடல், தலை எல்லாம் கறுப்பு உடை உடுத்தியிருந்ததால் மேகம் மறைத்த நிலவாய் மிளிர்ந்தாள்.

இண்டீரியர் டெகரேசனுக்காக நான் சென்றபோது 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியும் மேற்சொன்ன 20-ம் முகத்தை மூடாத கறுப்பு உடையில் வரவேற்றபோது வீட்டுத் தலைவரைத் தேடினேன். இல்லை.

இங்கு வீட்டைப் பர்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். ஒரு 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் வெறும் மண்னையும், கடினமில்லாத பாறைக் கற்களையும், ஈச்சமர ஓலையையும் வைத்துக் கட்டப் பட்ட சிறு சிறு குடிசைகள்தான் இங்கு பிரதானம். பயணத்திற்கு ஒட்டகமும், கழுதையும். மழையையே காணாத வறண்ட பாலைவனம். மழையில் நனைவதற்காகக் கப்பலேறி மும்பைக்கு வந்தவர்கள் உண்டு. கான்கிரீட் கட்டிடம் இவர்களுக்குக் கனவு. இந்தியாவின் வளத்தைக் கண்டு பொறாமையோடு மலைத்தவர்கள்.

பெட்ரோல் வளம் அரபு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இங்கு விளைச்சல் நிலம் இல்லாத்தால் ஏற்கெனவே வியாபார புத்தி உள்ளவர்கள்.பெட்ரோல் பணமும், அதனோடு வியாபாரப் பணமும் சேர்ந்து பாலைவனம், சோலையாக மாற ஆரம்பித்தது. உயரமான கட்டிடங்கள் முளைக்க ஆரம்பித்தன. நல்ல சாலை வசதி, அதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மரங்களும் புல்வெளிகளும் பாலைவனம் என்பதையே மாற்றிக் காட்டியது. நான் சென்ற வீடும் மிகப் பெரியது. நமக்கு ஒரு கிரவுண்டில் வீடு கட்டூவதே மலைப்பான விசயம். இந்த வீடு மட்டும் 8 கிரவுண்டிலும், அதனைச் சுற்றித் தோட்டம் ஒரு 40 கிரவுண்டிலும் உருவாக்கப்பட்டிருந்தது. சுற்றுச் சுவரை நடந்து கடக்க அரை மணி நேரமாகும். சரி, விசயத்திற்கு வருவோம். அவர்கள் வீட்டிற்குள் ஒரு பகுதியில் புதிய ஐடியாவில் இண்டீரியர் டெகரேசன் செய்ய வேண்டுமென அழைத்திருந்தார்கள்.

வீட்டிற்குள் கொஞ்சம் அராபிய, நிறைய மேற்கத்திய கலாச்சாரம் தென்பட்டது. நான் பார்த்தபோது எனக்குள் ஏதோ ஒரு வெறுமை தென்பட்டது. யோசித்தபோது... கிராமத்துக் கூரைவீட்டுக் கலாச்சாரம் நன்றாகப் பொருந்துவதுபோல் பட்டது. விளக்கினேன்.

இண்டீரியரில் நான் சொன்ன கான்செப்ட் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குக்கிராமத்தில் பிறந்து கூரை வீடுகளில் சந்தோஷமாகச் சுற்றியலைந்த என் சிறு வயது அந்த நாட்கள் எப்போதும் மனதின் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும். டிசைன் செய்யும் தருணம் கூரை கான்செப்ட் கண்டிப்பாக வெளிப்படும். அவர்களது பேலஸ் போன்ற பிரம்மாண்டமான வீடிற்குள் நான் கொடுத்த கூரை கான்செப்ட் அவர்களுக்குப் புது மாதிரியாகத் தோன்றவே நான் காண்பித்த மாதிரிப் படங்களைப் பார்த்து விட்டு உடனே 'ஓகே' என்றனர்.

அடுத்தமுறை அந்த இளம்பெண்ணைப் பார்த்தபோது இவள் மட்டும் இருந்தாள். 40 வயதுப் பெண் இல்லை. கண்களால் சுற்றிப் பர்த்துவிட்டுக் கேட்டேன்,

"உங்கள் அம்மா வரவில்லையா?" என் கெள்வியை உள் வாங்கிக் கொண்டு அப்பெண் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. பின்பு தணிந்த குரலில் சொன்னாள்,


"அம்மா இங்கு இல்லை"

"சரி, அப்போ டிசைனை உங்களிடம் மட்டும் காண்பித்தால் போதுமா? உங்கள் அம்மா எப்போ வருவார்கள்?"

"அம்மா இங்கு வர மாட்டார்கள்"

"அப்போ அன்னிக்கு உங்கள்கூட வந்தது...?"

"என் கணவரின் முதல் தாரம்"

அந்த நேரம் எனக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. 'கணவரின் முதல் தாரம்' இவள்...? இரண்டாம் தாரம்! நெருப்புக் கங்கை விழுங்கியதுபோல் திடுக்கிட்டேன்.

அப்பெண்ணிடம் அடுத்து என்ன பேச? வீட்டின் சுவரழகை, தரையழகை கூரையழகை மட்டுமே மனதுக்குள் தேக்கி நீந்திக் கொண்டிருந்த நான் ஒரு சிறு பெண்ணின் மன அலங்கோலத்தைக் கேட்டதும் திடுக்கிட்டேன். இது சரியா அல்லது தவறா என்ற வாதம் அப்புறம். அப்பெண் எப்படி ஏற்றுக் கொண்டாள்?

கீற்றுக் கூரையை எப்படியெல்லாம் அழகுபடுத்தலாம், என்ன நிறம் சுவற்றுக்குப் பொருந்து, தரையில் என்ன கற்கள் பதிக்கலாம் என்ற யோசனையெல்லாம் மறந்து, அழகு மிளிர்ந்த முகத்தில் ஏதோ சோகம் இழையோடுவதாகப் பட்டது. அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்டு விட்டேனோ? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டெனோ?

என் மவுனத்தைக் கண்டு சங்கடப் பட்டவளாக நெளிந்தாள்.

என் மனத் திடுக்கிடலை முகம் காட்ட அவள், "கூரை அழகா அல்லது காரை அழகா?"

இயல்பாகப் பதில் சொல்ல முடியாவிட்டாலும் "அதது இடத்தைப் பொறுத்தது. எனக்குக் கூரை பிடிக்கும்"

"ஏன்?"

"என் சிறு வயதில் கூரையில் இருந்தேன். அப்போதிருந்த சந்தோஷம் இப்போதிருக்கும் காரையில் கிடைக்கவில்லை"

"அப்போ காரையில் பிறந்த குழந்தைக்கு?" ஈட்டியான கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினேன்.

உங்க கான்செப்டான கூரை, காரைக்குள் எப்படிப் பொருந்தும்?" அந்தக் கேள்வி எனது கர்வத்தைப் பிளந்து சுக்குநூறாக்கியது. புதுமை செய்கிறேன், நான் செய்வது எல்லோருக்கும் பிடிக்கும் அல்லது பிடித்தாக வேண்டும் என்றிருந்த என் திமிர் செயலிழந்தது.

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

வலுவிழந்தவனாக, "நான் காட்டிய மாடல் படம் உங்களுக்குப் பிடித்திருந்ததே?"

பிடிக்கலைன்னு சொல்லலை. எப்படிப் பொருந்தும்னு கேட்கிறேன்!"

சத்தியமாக என்னிடம் பதிலில்லை!

"நீங்க கேட்க நினைச்சீங்களே... நானெப்படி இரண்டாம் தாரம்னு..?"

"அய்யோ... அது உங்க பர்சனல்..."

"இருக்கட்டும், என்னோட மனநிலைக்கு காரைக்குள் கூரை போலப் பொருந்தும்..."

என்ன ஒரு பதில்! எனது தொழிலை வைத்தே என்னை மடக்கிய பதில். எமது இந்திய வாழ்க்கை முறையில் இதுபோல் வயது வித்தியாசத்தோடு ஒரே வீட்டில் இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண நடைமுறையில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கலாச்சார மீறல் பேர்வழிகளிடம் இருக்கலாம். எமது சமுதாயத்தில் பெருமைப்படும் விசயமல்ல. மனதில் தோன்றியதைக் கேட்டேன்,

அவளது மண வாழ்க்கையையும் எனது டிசைனையும் அவள் பொருத்திப் பேசியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவும் அதே சமயம் ஒரு ஓரத்தில் பரிதாபமாகவும் இருந்தது. விசேசங்களுக்குப் போகும்போது மகள் போன்ற வயது உறுத்தாதா? அகத்திணை வாழ்க்கை எப்பெடி முழுமையனதாக இருக்கும்? காத்திருத்தலும், வெறுமையும்தான் கொடுப்பினையா? ஏற்கெனவே அராபிய ஆண்கள் இரண்டு விசயத்தில் மிகுந்த நாட்டமுடையவர்கள். ஒன்று கார். புதுப்புது மாடல் கார்கள் எங்கு உற்பத்தியானாலும் உடனே வாங்கிவிட முனைபவர்கள். இரண்டு - பெண்கள்.

வீட்டுக்குள் குடும்ப வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும். அவள் வயது தோழிகள் எல்லாம் வாழ்க்கை பற்றிய கனவோடு உல்லாசமாக இருக்கும்போது, கிண்டல், கேலி என எவ்விதத் தளையுமில்லாமல் விட்டு விடுதலையாகிப் பறவையாய்ப் பறக்கும்போது இவள் மட்டும் பந்தம் என்ற விலங்கோடு, குடும்பம் என்ற சுமையோடு வளைய வருவதென்பது... தைரியமாக அவளிடம் கேட்டேவிட்டேன்,

"வாழ்க்கை வேறு, வார்த்தை வேறு இல்லையா?" நான் கேட்கவும் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

என்னை ஆழமாகப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. கூரை கான்செப்ட், டிசைன், கொட்டேசன் எல்லாம் ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்தன. தொண்டையைச் செறுமிக்கொண்டு மெதுவாகக் கேட்டாள்,

"வாழ்க்கைன்னா என்ன?" அவள் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் பார்த்தேன்.

"பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை. சரிதானே?"

"சரிதான்..."

" நீங்கள் சென்னையில் பிறந்தது சாபமா அல்லது வரமா?"

"............."

"என் வாழ்க்கை துபாயில் என்று நானா தெரிவு செய்தேன்?"

"........" என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோ நொறுங்கியது.

" உங்கள் வாழ்க்கையில் உங்களால் கட்டுப்படுத்த முடிந்தது எதெது?"

"வசதி, நேர்மை, நட்பு...."

"பெற்றோர்?"

கூர்மையான வார்த்தையால் தாக்கப்பட்டு நிமிர்ந்து பார்த்தேன்.

"சரி, என் விசயத்திற்கு வருவோம். என் திருமணம் என்னைக் கேட்டு நடக்கவில்லை. இவ்வளவு வயசு வித்தியாசம் ஒரு உறுத்தல்தான். எனக்கும் கனவுகள் இருந்தன. என் மன வானில் நானும் கனவுகளோடு பறந்திருக்கிறேன். சரி, உங்கள் நாட்டில் வயசு வித்தியாசம் எப்படி?"

"4, 5, 6 அதிகபட்சம் 10. இப்ப நெறைய காதல் திருமணம். அதனால வயது வித்தியாசம் மிகக் குறைவு" கொஞ்சம் பெருமையோடு சொன்னேன்.

"எல்லோரும் சந்தோஷமாக இருக்காங்களா?"

அவளுடைய கேள்வி படாரென என்னைத் தாக்கிற்று. என்ன பதில் சொல்ல?வாழ்க்கையை இவ்வளவு தெளிவான கண்ணோட்டத்தோடு பார்ப்பவளிடம் எப்படி விவாதிக்க முடியும்?

"சந்தோஷங்கிறது வயசில மட்டுமில்லை. ஒருத்தர்க்கொருத்தர் அனுசர்க்கிறதில இருக்கு" உடைந்த குரலில் சொன்னேன்.

"அனுசரிக்க வயசு ஒரு தடையா?"

"............"

"அவர் என்னைக் கலக்காம எதுவும் செய்யிறட்தில்லை. நான் சந்தோஷமா இருக்கேன்"

அவள் வழியிலேயே கேட்டேன், "சந்தோஷம்னா என்ன?"

என் கேள்வி அவளைத் தொட்டிருக்க வேண்டும். யோசித்தாள். "நமக்குத் தேவையான உணவு, இருக்க வசதியன இடம், நான் என்ற ஈகோவை திருப்திப் படுத்தும் அங்கீகாரம்....எல்லாம் எனக்குக் கிடைச்சிருக்கு. அதனால நான் சந்தோஷமா இருக்கேன்"

"அப்போ மூத்த தாரம் சந்தோஷமா இருக்காங்களா?"

என்னுடைய கேள்வியை இப்படி எதிர்பார்க்கவில்லை போலும். திடுக்கிடலுடன் நிமிர்ந்து பார்த்தாள். அந்த வீட்டில் இவளுக்கு அங்கீகாரம் கிடைத்தால், மூத்த தாரத்துக்கு அங்கீகாரம் குறைவு என்று பொருள். அவளால் எனது கேள்விக்கு உடனடியாகப் பதீல் சொல்ல முடியவில்லை.

"ஏற்கெனவே அங்கீகாரம் உள்ளவங்கதானே. அவங்களும் சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும்"

ஆனால் ஒன்று! எதைப் பர்றிப் பேசியும் அவளை விவாதத்தில் அவளை ஜெயிக்க முடியவில்லை. வாழ்க்கையைத் தெளிவான பார்வையொடு அணுகுபவளை எப்படி விவாதத்தில் ஜெயிக்க?

அதன்பின் நிறையப் பேசினோம். இந்த நாடு பற்றி, இந்திய நாடு பற்றி, இந்த நாட்டின் தொழில் வளம் பற்றி, இந்திய நாட்டின் வேகமான தொழில் வளர்ச்சி பற்றி, அரபு நாடுகளின் மேல் இந்தியர்களுக்கிருந்த மயக்கம் பற்றி, இந்தியாவின் வளர்ச்சியில் அந்த மயக்கம் வேகமாக விலகுவது பற்றி, உலக மக்கள் வாழ்க்கை பற்றி, இண்டீரியர் தொழிலின் எதிர்காலம் பற்றி, அவளின் தொழில் முனைவு விருப்பம் பற்றி, இந்தியாவில் தொழில் தொடங்கும் அவளது விருப்பம் பற்றி, தோழிகள் பற்றி...என நிறையப் பேசினோம்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத விவாதமாகவும் அனுபவமாகவும் இருந்தது. முடிவில் இரண்டாம் தாரம், மகள் வயது போன்ற என் எண்ணம் தலைகீழாக மாறி அவளுடைய வாழ்க்கை நியதி சரியானதே என்ற முடிவுக்கு வந்தேன்.

காண்ட்ராக்ட் ஒப்புதல் பெற்றவுடன் வணக்கம் சொல்லிக் கிளம்பினேன். அப்போது தளுதளுத்த குரலில் சொன்னாள்,

"என்னதான் விவாதத்தில் நான் ஜெயித்தாலும் வயது ஒத்த இணையோடு ஜோடியாகப் போக முடியாததில் எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு"

அவள் கண்கள் கலங்கியிருந்தன.
------------------------------

Tuesday, December 18, 2007

தத்துவம்?!

பறவை
தன் சிறகை
விரிக்கும்போதுதான்
காற்றும்
அதனைச் சுமக்கத்
தயாராகிறது.
மனிதனின்
முயற்சிக்கு
பறவைமூலம்
இயற்கை சொன்ன பாடம்!